Sunday 5 March 2017

எனதருமை தோழனே!

                   இன்று உன்னை கடைசியாக பற்ற வைக்கிறேன்.. கொஞ்சம் கவனமாகவும்!! நாளை முதல் உன்னை பார்த்தாலும், மற்றவர்கள் கைகளில் நீ தவழ்ந்தாலும் சிறு புன்முறுவலுடன் கடந்து செல்வேன்..

வழக்கத்தை விட இன்று உன் கங்கு பிரகாசமாக எரிகிறதே.. கோபமா.. இருக்கட்டும்.. எனக்காக எப்போதும் உன்னை எரித்துக்கொள்கிறவனாயிற்றே.. கோபப்பட உரிமையுண்டு தோழா.. அதுமட்டுமில்லாமல் இந்த உதடுகளையும் நேசிக்கும் நல்லிதயம் நீ அல்லவோ..


நீ எப்போது என் வாழ்க்கையில் வந்தாய்? யார் எனக்கு உன்னை அறிமுகப்படுத்தியது? மறந்தேபோனது.. ஆனால் பல ஆண்டுகளாக நீ என்னோடு இருந்திருக்கிறாய்..  தோல்விகளின் போது தோள் கொடுக்கும் தோழனாய், பசியின் போது உணவாய், தனிமையின் போது அரணாய் என்றும் நீ என்னோடு இருந்திருக்கிறாய்.

என் மதிப்பு எப்படி சிறிது சிறிதாக உயருகிறதோ அதுபோல் உன் மதிப்பும் உயருகிறது. இன்று உன் விலை 10 ரூவாயாமே.. நல்லது . உன் மதிப்பு இன்னும் உயரவேண்டும்...

ஏன் இந்த பிரிவு! என உதட்டை சுட்டு நீ கேட்பது வாய் வழியாக மூளைக்கு புரியதான் செய்கிறது.  காசை சேமிக்க என சொல்லி ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பஞ்ச காலத்தில் பஞ்சு வரை உன்னை ருசித்தவன் நான்..  உடல்நலம் பாதிக்கிறது.. இது வேன்றுமென்றால் கொஞ்சம் உண்மை.. உன்னால்  எனக்கு சில உபாதைகள் தான். ஆனால் அதுவும் காரணமல்ல..

பின் ஏன்?

உன்னை விளையாட்டாக பற்றவைத்தான்.. முதலில் எல்லாமே விளையாட்டு தானே... பின் நண்பனாவே மாறிப்போனாய்..
எனக்கு எப்போதும் ஆறுதலாக நீ இருந்தாய்.. இதோ காரணம்,, இதுவே காரணம்.. ஆறுதலாய் நீ இருந்தாய்.. இப்போது ஆறுதல் தேவையில்லை.. சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள்.. விரைவில் நல்லவர்கள் வரவுள்ளனர். இனி நீ எனக்கு தேவையில்லை..

நமது காதல் முடிந்துபோனது.. நண்பர்களுக்கு  இது புரிய கொஞ்சம் நாளாகும்... மீண்டும் உன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவார்கள்.. உன்னை என் உதட்டில்  திணிக்க முயல்வார்கள்.. அவர்களிடம் சொல்ல வேண்டும் காதல் ஒருமுறை தான் வருமென்று.. குறிப்பாக ஒருமுறை காதலித்த ஒருவரிடமோ ஒரு பொருளிடமோ மீண்டும் காதல் வராது என்றும் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்..

ஐயோ, இது என்ன! நீயாகவே அணைந்துவிட்டாய்..ஓ, இனி நான் உன்னை அணைக்க மாட்டேன் என்பதாலோ..

ஆம் இனி நான் உன்னை அணைக்கவும் மாட்டேன்..  “அணைக்கவும்” மாட்டேன்..




Monday 10 August 2015

மறக்கப்பட்டவன் அல்ல, மறைக்கப்பட்டவன் - ஒரு உண்மை படைப்பாளி




ஜான் ஆப்ரகாம் –ஜான் ஆப்ரகாம். மலையாளத்தின் மறக்க முடியாத படைப்பாளி.
இன்று அவரது பிறந்த நாள்.
பாலுமகேந்திராவுடன் ஒன்றாக பூனே திரைப்படக்கல்லூரியில் படித்தவர். இவரது முதல் படமான வித்யார்த்திகளே இதிலே இதிலேவில் பாலுமகேந்திரா ஒரு உதவியாளராக பணியாற்றியுள்ளார் என்பது படித்த செய்தி. இவரது கடைசி படமான அம்மா அறியான்   பிரித்தானிய திரைப்பட நிறுவனத்தோட சிறந்த 10 இந்திய படங்கள்ல இருக்குற ஒரே தென்னிந்திய திரைப்படம். திமிழ்ல இவர் இயக்குன அக்ரகாரத்தில் கழுதை அப்போவே ஒரு யுக புரட்சி. லூசியா  கன்னடப்படம் மக்கள்கிட்ட சேகரிச்ச பணத்த வச்சி எடுத்ததுனு சொல்லுவாங்க. ஆனா இத அப்போவே தன்னோட ஒடேசா இயக்கம் மூலம் சாதிச்சவர் ஜான் ஆப்ரஹாம்.  அவரை பற்றிய பெரும்பாலானோர் கருத்து குடிகாரன், கிருக்கன். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாதவர். அவரோட அக்ரகாரத்தில் கழுதை படத்தின் கதையே தனித்துவமானது. அந்த கிளைமேக்ஸ் போதும். (இந்த படம் தமிழ் நாட்ல தடை செய்யப்பட்டது வேற விசயம்.)
அம்மா அறியான் படம் ஒரு நக்சலைட்டின் மரணத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் நிறைந்த படம்.
அவரப்பத்தி சொல்லனும்ன அவர் ஒரு நாடோடி தான் . தனக்குனு எதுவும் சேர்த்துகிட்டது  கிடையாது.


சினிமாவை போறுத்தவரை அவரின் கருத்துகள் இதுதான்.

படங்களுக்கு சிம்பாலிக் ஷாட் தேவையில்லை. நான் ஒரு கழுதையைக் காட்டுகிறேன் என்றால் அது கழுதைதான். உது உங்களுக்குப் போப்பாகத் தெரிந்தால் அது உங்களது சுதந்திரம்"

திராவிடப் பழங்குடி மக்களின் இயல்புகளையே என் சினிமாவில் பிரதிபலிக்க விரும்புகிறேன்".
எனக்கு சினிமாவின் மூலம் ஒரு சல்லிக்காசு கூட லாபம் வேண்டாம். நான் பசியை ஜெயித்தவன். எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்தின் கீழ் படுத்துறங்குபவன் நான். நான் இயற்கையின் மைந்தன். புழுதியே எனக்கு இதம். எனக்குத் தேவையெல்லாம் என்னைச் சினிமா எடுக்க அனுமதியுங்கள்"


அவர் மறக்கப்பட்ட படைப்பாளி அல்ல, மறைக்கப்பட்ட படைப்பாளி.






Monday 27 October 2014






வீதியோர மனிதர்கள்

:

நாம் என்ன தான் உயரே பறந்து  உலகை சுற்றும் கழுகாக மாற ஆசைப்பட்டாளும், நமக்கே நமக்கென்று ஒரு சிறிய கூ(வீ)டு இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக ஆசை படுவோம். ஆனால் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 78 மில்லியன் மக்கள் விடுகள் அற்று இருக்கின்றனர் .இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள்..

யார் இவர்கள்:
 வீதியோரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை சுமையென்று  கருதிய  இவர்களின் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.. அடுத்ததாக பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட  பெற்றோர்கள் .இன்றைய நாகரிக காலத்தில் பெற்றோரை வீண் சுமை என பல பிள்ளைகள் கருதுகின்றனர். அதில் பல 'நல்லவர்கள்' தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு தத்து கொடுத்துவிடுகின்றனர். சிலர் வீதியில் விட்டுவிடுகின்றனர்.
 வேலைவாய்ப்பு இல்லாத பல வட நாட்டவர்கள் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனர் காலசுலற்சியால் இவர்களும் வீதியோர மனிதர்களாக மாறிவிடுகின்றனர் , வீடுகளில் சண்டைபோட்டு ஓடிவரும் சிறுவர்கள், குப்பை தொட்டியில் போடப்படும் குழந்தைகள் என இந்த வட்டம் மிக பெரியது.
இவர்கள் இருக்க வீடில்லாமல் தெருவோரங்களிலும், கோயில்களிலும், பாலங்களின் கீழும் தஞ்சம் அடைகிறார்கள்..

சமுதாயத்தால் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:
இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலும் பதிக்கப்படுபவர்கள் சிறுவர்கள் தான்..  சிலர் இவர்களை பிச்சை எடுக்க உட்படுத்துகின்றனர்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தேவைப்படும் உணவும்  கூலியும் குறைவு என்பதால், குழந்தை தொழிலாளராகவும்  மாற்றப்படுகின்றனர்.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% சதவீதம் குழந்தைதொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.  சிலரின் இச்சையால் வல்லுறவுக்கும் இறையாக்கபடுகின்றனர்...
இன்னும் சிலரோ  மதுவை  குடித்துவிட்டு அதிவேகமாக வண்டியை ஓட்டி சாலையோரம் வசிப்பவர்களின் உயிரையும் குடிக்கிறார்கள்..
மேலும் சில 'பெரிய' மனிதர்கள் இவர்களை சமூகவிரோத செயல்களுக்கும் பயன் படுத்துகிறார்கள்.. முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், தங்களின் அடுத்த வேளை உணவுக்காக அவர்களும் எதையும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பின்னர் இவர்களே சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றனர். இயற்கையும் இவர்களுக்கு சாதகமாய் இருப்பதில்லை . குளிர் காலங்களில் டெல்லியில் மட்டும் சராசரியாக  ஒரு  நாளைக்கு 1௦ பேர் கடுங்குளிர் காரணமாக இறக்கின்றனர்.  தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது.சென்னையில் அனேக இடங்களில் இரவில் தூங்க இடம் இல்லாமல் வீதியில் , குளிரில் உறங்கும் மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்..

தீர்வுதான் என்ன?
 பரிச்சையில் தோல்வி, காதல் தோல்வி என சின்ன சின்ன விஷயங்களுக்காக உயிரை விடுபவர்களுக்கு மத்தியில் வீதியில் வாழ்ந்தாலும் சமூகத்தில் முன்னேற வேண்டும் என போராடுபவர்களும் இருக்கிறார்கள்.
அரசாங்கமும் இவர்களுக்காக பல உதவிகளை செய்துதான் வருகிறது..
வெறும் வேடிக்கை பார்ப்பதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை
இவர்களின் அவலத்தை முழுவதும் போக்க 'என்னால் முடியாது ஆனால் நம்மால் முடியும்'.  மாற்றுத்திறனாளிகளையும் முதியவர்களும் சுமை என கருதி வீதியில் விடாமல் வீட்டில்வைத்து பராமரித்தாலே இவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும்.. அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும்  கூட்டு முயற்சி செய்து இவர்களுக்கு அடிப்படை கல்வி மற்றும் வசதிகள்(உரிமைகள்) கிடைக்க வழி செய்ய வேண்டும்.